கூடலூர்-கேரள மலைப்பாதையில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

கூடலூர்-கேரள மலைப்பாதையில் மண்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2020-06-23 04:00 GMT
கூடலூர்,

கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால், கூடலூர்-கேரள மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைப்பாதை கடும் சேதம் அடைந்தது. இதை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இந்த நிலையில் கேரளா மற்றும் நீலகிரியில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் கேரளா மற்றும் கூடலூரில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கூடலூர்-கேரள எல்லையோர பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது மலைப்பாதையில் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதன் காரணமாக சரக்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வழிக்கடவு போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் மலைப்பாதையில் விழுந்து கிடந்த மண்ணை அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, கூடலூர்-கேரள மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் சரக்கு வாகன டிரைவர்கள் கவனமுடன் செல்ல வேண்டும். வனப்பகுதி மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் சரக்கு வாகனங்களை நிறுத்தி ஓய்வு எடுக்கக்கூடாது என்றனர்.

மேலும் செய்திகள்