தலைஞாயிறு பேரூராட்சியில் ரூ.28 லட்சத்தில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு அமைச்சர் வழங்கினார்

தலைஞாயிறு பேரூராட்சியில் ரூ.28 லட்சத்தில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பினை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்.

Update: 2020-06-26 00:51 GMT
வாய்மேடு,

தலைஞாயிறு பேரூராட்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 14 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பிலான கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு சிறப்பு நிதி உதவி தொகுப்பினை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

இந்த திட்டம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் செம்பனார்கோவில், நாகப்பட்டினம், தலைஞாயிறு மற்றும் சீர்காழி ஆகிய 4 வட்டாரங்களை சார்ந்த 147 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில் ரூ.300 கோடியில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டம் முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ரூ.11.11 கோடி

அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ11.11 கோடி மதிப்பில் 2,589 பயனாளிகள் பயன்பெறக்கூடிய வகையில் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊருக்கு வந்த திறன் பெற்றவர்களில் வேலை இல்லாத 167 இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் தலா ரூ.1 லட்சம்

வீதம் மொத்தம் ரூ.1.67 கோடி நீண்ட கால கடனாக வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பாலமுருகன், ஊரக புத்தாக்க திட்ட இயக்குநர் செல்வம், கூட்டுறவு சங்க தலைவர் அவை.பாலசுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் இளவரசி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்