மாவட்டத்தில் 6 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது 15¼ பவுன் மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் 6 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 15¼ பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

Update: 2020-06-26 01:23 GMT
வெண்ணந்தூர்,

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தச்சங்காடு ராமசாமி என்பவர் வீட்டில் கடந்த மாதம் 24-ந் தேதி பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகைகளை யாரோ திருடி சென்றுவிட்டனர். இதேபோல் எலச்சிபாளையம் அருகே வையப்பமலையை சேர்ந்த சண்முகம் என்பவர் வீட்டில் 4 பவுன் நகைகளை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார்.

காளிப்பட்டியை சேர்ந்த ரமேஷ்குமார் வீட்டில் கடந்த 10-ந் தேதி பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ½ பவுன் தங்க தோடு, வைர டாலர் ஆகியவை திருட்டு போனது. இதேபோல் காளிப்பட்டி புதுப்பாவடி தெருவை சேர்ந்த கந்தராசு என்பவர் வீட்டில் 1¾ பவுன் நகைகள் திருட்டு போனது.

குமாரபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்லக்காபாளையம் கொங்கு நகரை சேர்ந்த பிரகாசம் வீட்டில் கடந்த 15-ந் தேதி பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகைகளை யாரோ திருடி சென்றனர். குப்பாண்டபாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வீட்டில் 3 பவுன் நகைகள் திருட்டு போனதாகவும் சம்பந்தப்பட்ட நபர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் செய்து இருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

15¼ பவுன் மீட்பு

இந்நிலையில் நேற்று வெண்ணந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் சப்பையாபுரம் தற்காலிக வாகன சோதனை சாவடியில் வாகன சோதனை செய்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தார். விசாரணையில் அவர் சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த பாண்டியன் (வயது 38) என்பது தெரியவந்தது. அவர் மீது சேலம் மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் நாமக்கல் மாவட்டத்தில் தச்சங்காடு, வையப்பமலை, காளிப்பட்டி, பள்ளக்காபாளையம், குப்பாண்டபாளையம் ஆகிய பகுதிகளில் 6 வீடுகளின் பூட்டை உடைத்து பீரோக்களில் இருந்த 15¼ பவுன் நகைகளை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின்பேரில் திருட்டுபோன 15¼ நகைகளை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் அவரை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார். 

மேலும் செய்திகள்