ஊட்டியில் பலத்த மழை

ஊட்டியில் பலத்த மழை பெய்தது.

Update: 2020-06-26 02:30 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் பரவலாக மழை பெய்தது. பின்னர் கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல், பகலில் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று காலையில் ஊட்டி நகரில் வெயில் அடித்தது. பின்னர் 11 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

சாலைகளில் வெள்ளம்

இதனால் கமர்சியல் சாலை, ஏடிசி, மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து செல்வதை காண முடிந்தது. பலத்த மழையால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள சில கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பின்னர் மழைநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகள் நீக்கப்பட்டு, தண்ணீர் வடிந்தோடியது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையளவு (மில்லி மீட்டரில்)விவரம் வருமாறு:- ஊட்டி - 8.5, குந்தா -9, எமரால்டு - 12, கெத்தை-11, கேத்தி -11, உலிக்கல்-40, கோடநாடு-13.5, கூடலூர்- 4 உள்பட மொத்தம் 184.5 மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 6.36 பதிவானது.

மேலும் செய்திகள்