கனமழைக்கு வாய்ப்பு: கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு 3 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்

கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

Update: 2020-06-28 01:17 GMT
மங்களூரு, 

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. ஆரம்பத்தில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. பெங்களூரு உள்பட தென்கர்நாடக பகுதிகளில் மழை குறைந்த அளவே பெய்து வந்தது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யவில்லை. ஆனால் அதே நேரத்தில் பெங்களூரு, சாம்ராஜ்நகர், மைசூரு உள்ளிட்ட தென்கர்நாடக பகுதிகளில் கனமழை கொட்டியது.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 115.6 மில்லி மீட்டர் முதல் 204.4 மி.மீ வரை இந்த 3 மாவட்டங்களிலும் மழை பெய்யலாம். இதனால் அந்த மாவட்டங்களுக்கு நாளை(அதாவது இன்று) முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்