நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு யாஷ் ராஜ் படநிறுவன காஸ்டிங் இயக்குனரிடம் போலீஸ் விசாரணை

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக யாஷ் ராஜ் பட நிறுவன காஸ்டிங் இயக்குனரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2020-06-28 01:23 GMT
மும்பை,

எம்.எஸ். தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி படத்தில் நடிதத்தன் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் (வயது34). இவர் கடந்த 14-ந் தேதி பாந்திராவில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங் எந்த பின்புலமும் இல்லாமல் இந்தி சினிமாவில் வளர்ந்தவர்.

எனவே இவர் திரையுலகினரால் அவமதிக்கப்பட்டதாகவும், மேலும் அவரை பெரிய தயாரிப்பு நிறுவங்களின் படங்களில் நடிக்கவிடாமல் சூழ்ச்சிகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து போலீசார் நடிகரின் குடும்பத்தினர், நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் நடிகர் சுஷாந்த் சிங்குடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் குறித்த விவரங்களை தருமாறு யாஷ் ராஜ் பட தயாரிப்பு நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அந்த நிறுவனமும் ஒப்பந்தகளை போலீசாரிடம் வழங்கியிருந்தது.

இந்தநிலையில் நேற்று போலீசார் யாஷ் ராஜ் பட நிறுவன பெண் காஸ்டிங் இயக்குனர் சானு சர்மாவிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் திரிமுகே கூறுகையில், " யாஷ்ராஜ் நிறுவனத்தின் காஸ்டிங் இயக்குனர் சானு சர்மாவிடம் பாந்திரா போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது " என்றார்.

சானு சர்மா இந்தி திரையுலகில் பிரபல காஸ்டிங் இயக்குனர் ஆவார். இவர் தான் நடிகர்கள் ரன்வீர் சிங், அர்ஜூன் கபூர், வானி கபூர் உள்ளிட்டவர்களிடம் உள்ள நடிப்பு திறமையை கண்டறிந்து யாஷ்ராஜ் பட நிறுவனத்துக்கு பரிந்துரை செய்தவர் என கூறப்படுகிறது. மேலும் இவர் நடிகர் சுஷாந்த் சிங்குடன் யாஷ்ராஜ் நிறுவனத்துக்காக ‘சுத் தேசி ரோமன்ஸ்', ' டிடக்டிவ் பியோம்கேஷ் பாக்சி ' ஆகிய படங்களில் பணி புரிந்து உள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 24 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்