களக்காட்டில் வனவிலங்குகளின் எச்சங்கள் சேகரிப்பு; புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்வையிட்டார்

கணக்கெடுப்பு பணிகள் நிறைவு பெற்றதையொட்டி, களக்காட்டில் வனவிலங்குகளின் எச்சங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

Update: 2020-06-28 22:45 GMT
களக்காடு,

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள புலி, சிறுத்தை, கரடி, கடமான், செந்நாய், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் கணக்கெடுப்பு பணிகள் நடப்பது வழக்கம், அதுபோல இந்தாண்டு கணக்கெடுப்பு பணிகள் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ பணிகளை தொடங்கி வைத்தார்.

களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு வன சரகங்களில் உள்ள 21 பீட்களிலும், 21 குழுவினர் சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த பணிகள் நேற்று முடிவடைந்தது.

இதுபற்றி புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கணக்கெடுப்பின் போது 12 புலிகளின் கால்தடங்கள், 4 சிறுத்தைகளின் கால்தடங்கள், 7 கரடிகளின் கால்தடங்கள், 4 ஓநாய்களின் கால்தடங்கள், 5 புலிகளின் எச்சங்கள், 25 சிறுத்தைகளின் எச்சங்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டுள்ளன. இவைகள் சென்னையில் உள்ள வனவிலங்குகள் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு நடைபெறும் ஆய்வுக்கு பின்னர் வனவிலங்குகளின் எண்ணிக்கை கணக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். வழக்கமாக இப்பணியில் தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்தாண்டு கொரோனா வைரஸ் தடை உத்தரவு உள்ளதால் தன்னார்வலர்கள் கலந்து கொள்ளவில்லை. அரசு வழிகாட்டுதலின் படி வனத்துறை ஊழியர்கள் மட்டுமே இப்பணியில் ஈடுபட்டனர். கோதையாறு வனப்பகுதியில் கணக்கெடுப்பு குழுவினர் புலியை நேரில் பார்த்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது வனசரகர்கள் களக்காடு புகழேந்தி, கோதையாறு பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். கணக்கெடுப்பு பணியின் போது சேகரிக்கப்பட்ட வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்களை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்