தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் பலி

தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் பலியானான்.

Update: 2020-06-29 01:30 GMT
தஞ்சாவூர்,

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள பகட்டுவான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுவன். இவருடைய தந்தை ரேஷன்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் தஞ்சை அண்ணாநகரில் வசித்து வந்தனர். 13 வயது சிறுவனுக்கு தசை மற்றும் இணைப்பு திசு சிதைவு நோய் இருந்து வந்தது.

இந்நிலையில் இச்சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 24-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பரிதாப சாவு

இதையடுத்து சிறுவனை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் நேற்று முன்தினம் அதிகாலை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று நள்ளிரவு சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், “சிறுவனுக்கு தசை மற்றும் இணைப்பு திசு சிதைவு நோய் பிறவியிலிருந்தே இருந்து வந்தது. இந்த நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவருக்கு இதய இயங்கு விசை 70 சதவீதம் இருக்க வேண்டிய நிலையில், 27 சதவீதம் மட்டுமே இருந்தது. இருப்பினும், இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவன் உயிரிழந்தான். அவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அவனது இறப்புக்கு தசை மற்றும் இணைப்புத்திசு சிதைவு நோய் காரணம்”என்றனர்.

சிறுவனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடைய உறவினர்களுக்கும் கொரோனா பரிசோதனைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்