சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் ரூ.6½ லட்சத்துக்கு ஏலம் அதிகாரிகள் நடவடிக்கை

நாகையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை அதிகாரிகள் ரூ.6½ லட்சத்துக்கு ஏலம் விட்டனர்.

Update: 2020-06-29 01:39 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் கடல் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 26-ந் தேதி மீன் வளத்துறை ஆய்வாளர்கள் கார்த்திகேயன், ஆர்த்தீஸ்வரன், கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழுவினர் நாகை நம்பியார் நகர் பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது சுருக்குமடி வலையை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 8 ஆயிரத்து 250 கிலோ மத்தி மீன்கள் விற்பனைக்காக 3 வாகனங்களில் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. அந்த வாகனங்கள் கானூர் சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்டு 3 வாகனங்களும் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

மீன்கள் ஏலம்

அதில் இருந்த மீன்களை ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 250-க்கு அதிகாரிகள் பொது ஏலத்துக்கு விட்டனர். இதேபோல் நாகூர் பட்டினச்சேரி, சாமந்தான்பேட்டை மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி பிடித்து விற்பனைக்காக 7 வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட 22 ஆயிரத்து 820 கிலோ மத்தி மீன்கள் மேலவாஞ்சூர், வைப்பூர் சோதனை சாவடிகளில் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த மீன்கள் நேற்று மீன்வளத்துறை இணை இயக்குனர் சேவியர், உதவி இயக்குனர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையில் ரூ.4 லட்சத்து 56 ஆயிரத்து 400-க்கு ஏலம் விடப்பட்டது. மீன்களை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்த ரூ.6 லட்சத்து 62 ஆயிரத்து 650-ஐ அதிகாரிகள் அரசு கணக்கில் செலுத்தினர்.

மேலும் செய்திகள்