மேலப்பாளையம் சந்தையை திறக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்துக்கு கால்நடைகளுடன் வந்து மனு கொடுத்த மக்கள்

மேலப்பாளையம் சந்தையை திறக்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு கால்நடைகளுடன் வந்து மக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2020-06-30 00:00 GMT
நெல்லை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பொதுமக்கள் திங்கட்கிழமை வந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட்டுச் செல்கிறார்கள்.

இதையொட்டி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமையில் கட்சியினர், பொதுமக்கள் ஆடு, கோழி, மாடு உள்ளிட்ட கால்நடைகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். நுழைவு வாசலில் நின்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை மேலப்பாளையத்தில் பல ஆண்டுகளாக ஆடு, மாடு சந்தை இயங்கி வருகிறது. பலருக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுத்த இந்த சந்தை கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களாக பயன்பாடு இல்லாமல் பூட்டிக் கிடக்கிறது. இதனால் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வந்த பலர் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடி வருகின்றனர். எனவே அரசு மற்ற தொழில்களுக்கு அனுமதி அளித்தது போல் சமூக இடைவெளி, முக கவசம் போன்றவற்றை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் மேலப்பாளையம் சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் உடையார் தலைமையில் வந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அவர்கள் கொடுத்த மனுவில், “நெல்லையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் அனுமதி பெறாமல் இயங்கும் மாட்டு இறைச்சி கடைகளை தடை செய்ய வேண்டும். குறிப்பாக பேட்டையில் அதிகமாக பொதுமக்கள் கூடுகிற இடத்தில் உள்ள கடையை அகற்றி பொதுமக்களை கொரோனா வைரசிடம் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

இதே போல் பல்வேறு தரப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை கொடுத்தனர்.

மேலும் செய்திகள்