சிகிச்சை அளிக்க மறுத்ததால் கொரோனா நோயாளி சாவு: 18 தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீசு

சிகிச்சை அளிக்க மறுத்ததால் கொரோனா நோயாளி உயிரிழந்த விவகாரத்தில் 18 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத் துறை கமிஷனர் நோட்டீசு அனுப்பியுள்ளார்.

Update: 2020-07-01 22:35 GMT
பெங்களூரு,

சிகிச்சை அளிக்க மறுத்ததால் கொரோனா நோயாளி உயிரிழந்த விவகாரத்தில் 18 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத் துறை கமிஷனர் நோட்டீசு அனுப்பியுள்ளார்.

சிகிச்சை அளிக்காததால் உயிரிழப்பு

பெங்களூருவை சேர்ந்த பவர்லால் சுஜனி என்பவர், கொரோனா அறிகுறியுடன் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றார். 2 நாட்கள் அவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளார். 18 தனியார் மருத்துவமனைகளுக்கு அவர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார்.

ஆனால் எந்த மருத்துவமனையும் அவரை சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால் அவர் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நோட்டீசு

இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி தனியார் மருத்துவமனைகளுக்கு கர்நாடக மாநில சுகாதாரத்துறை கமிஷனர் நோட்டீசு அனுப்பியுள்ளார். கர்நாடக சுகாதாரத்துறை கமிஷனர், 18 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ள நோட்டீசில் கூறியிருப்பதாவது:-

பெங்களூருவை சேர்ந்த பவர்லால் சுஜனி (வயது 52) என்பவருக்கு கடந்த ஜூன் 27-ந் தேதி காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினையால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். சுமார் 18 மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றனர். எந்த மருத்துவமனையிலும் அவரை சேர்த்துக்கொள்ளவில்லை. படுக்கை காலி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்.

விதிகளை மீறும் செயல்

உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக வந்தவரை உள்நோயாளியாக அனுமதிக்காமல் மருத்துவமனைகள் நிராகரித்தது, சட்டவிரோதம் ஆகும். கொரோனா நோயாளிகள் அல்லது கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்க்க மறுப்பது விதிகளை மீறும் செயல்.

உங்கள் மருத்துவமனைகள், அந்த நோயாளிகளை சேர்க்காமல் நிராகரித்ததற்காக உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நோயாளியை சேர்க்க மறுத்தது குறித்து உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்