2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்வானவர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்களா? அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்வானவர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்களா? என்பதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

Update: 2020-07-02 23:30 GMT
கடத்தூர், 

2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்வானவர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்களா? என்பதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. அரசு சிறப்பான முறையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஏரிகளை தூர்வாருதல், குடிமராமத்து பணிகள் மற்றும் அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகள் நடந்து வருகிறது. குள்ளம்பாளையத்தில் உள்ள சேலத்து மாரியம்மன் கோவிலுக்கு ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் 2 தேர்கள் செய்வதற்கான நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்கியுள்ளார்.

நீட் தேர்வுக்கு பயிற்சி

கோவிலில் உள்ள குளம் அழகுபடுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொடிவேரி அணையில் ரூ.2 கோடியே 35 லட்சம் செலவில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்போடு குளிப்பதற்கு வசதியாக பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அ.தி.மு.க. அரசு தொலை நோக்கு சிந்தனையோடு செயல்பட்டு கொண்டிருக்கிறது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக இதுவரை ரூ.100 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு தனியார் நிறுவனம் மூலம் 10 நாட்களாக 7 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் மாணவர்கள் பங்கேற்பது குறித்து முதல்-அமைச்சர் தான் முடிவு எடுப்பார். நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு

மேலும் அமைச்சரிடம் நிருபர்கள், ‘2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்களா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், ‘தற்போதைய சூழ்நிலையில் 7 ஆயிரத்து 200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர். இதை ஆய்வு செய்த பிறகுதான் அரசு முடிவு எடுக்கும்’ என்று பதில் அளித்தார்.

கடன் உதவி

முன்னதாக குள்ளம்பாளையம், நாதிபாளையம், கெட்டிச்செவியூர் ஆகிய பகுதிகளில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கறவை மாடுகள் வாங்க கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, 130 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 13 லட்சம் கடன் உதவி வழங்கினார்.

இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், வங்கியின் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியம், கூட்டுறவு இணை பதிவாளர் பார்த்திபன், முதன்மை வருவாய் அலுவலர் அழகிரி, ஆர்.டி.ஓ. ஜெயராமன், குள்ளம்பாளையம் கூட்டுறவு சங்க செயலாளர் மயில்சாமி, நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்