கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி பள்ளிகளில் 84 கட்டுப்பாட்டு அறைகள் அதிகாரிகள் தகவல்

கொரோனா பரவலை தடுக்க, கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் 84 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2020-07-03 23:05 GMT
கோவை,

கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் இந்த தொற்றால் 608 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி நோய் தொற்று பாதிப்புக்குள்ளானவர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாநகரில் 18-க்கும் மேற்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் தினமும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. மேலும் மாநகர பகுதியில் மட்டும் வெளியூர்களில் இருந்து வந்த 2 ஆயிரத்து 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கள ஆய்வு

இதுதவிர மாநகராட்சி சார்பில் 800 ஒப்பந்த பணியாளர்களை கொண்டு மாநகர் முழுவதும் வீடு,வீடாக கள ஆய்வு செய்யும் பணி தொடங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சோதனை அடிப்படையில் கடந்த சில தினங்களாக மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் வீடு, வீடாக கள ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணியில் சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் என மேலும் 1000 பேரை நியமித்து, களப்பணியில் மொத்தம் 1800 பேரை ஈடுபடுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இவர்கள் சேகரித்து அளிக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து அளிக்க மாநகராட்சி பள்ளிகளில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

84 கட்டுப்பாட்டு அறைகள்

வீடு, வீடாக களப்பணியில் ஈடுபடும் நபர்களுக்கு பிரத்யேக படிவம் வழங்கப்படும். இந்த படிவத்தை பயன்படுத்தி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் வீடு, வீடாக சென்று பெயர், முகவரி மற்றும் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளதா? வெளியூர்களில் இருந்து யாராவது வந்துள்ளனரா? என்பது குறித்து கேட்டறிந்து பூர்த்தி செய்ய வேண்டும்.

பின்னர் அதனை அந்த வார்டுக்குட்பட்ட பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் களப்பணியாளர்கள் ஒப்படைப்பார்கள். இதற்காக கோவை மாநகர பகுதியில் உள்ள 84 மாநகராட்சி பள்ளிகளில் சிறிய அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. இங்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டு அறிக்கையை எங்களுக்கு அனுப்புவார்கள்.

மேலும் களஆய்வு பணியில் ஈடுபடும் ஊழியர்கள், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டில் இருக்கின்றனரா? அல்லது வெளியில் சுற்றி திரிகிறார்களா? என்பது குறித்து கண்காணித்து தகவல் கொடுப்பார்கள்.

மேலும் செய்திகள்