வடகாடு பகுதியில் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை

வடகாடு பகுதியில் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2020-07-04 05:52 GMT
வடகாடு, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலின்போது மிகவும் பாதிக்கப்பட்ட வடகாடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் தற்போது வரை அதிலிருந்து மீளமுடியாமல் உள்ளனர். குறிப்பாக தென்னை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். பின்னர் தென்னை மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வரும் நிலையில் அவற்றில் பூச்சி மற்றும் வண்டுகள் தாக்குதல் காரணமாக வேதனையில் உள்ளனர்.

மேலும் புயலில் தப்பிய தென்னை மரங்களில் விளைந்த இளநீர், தேங்காய்கள் போன்றவற்றை கொரோனா ஊரடங்கால் வாரச்சந்தைகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேங்காய் விலை குறைந்துள்ளதாக கூறும் விவசாயிகள், தற்போது ஒரு தேங்காய் ரூ.8 முதல் ரூ.10, ரூ.11 ஆகிய விலைகளிலேயே தங்களிடம் இருந்து வாங்கப்படுவதாக தெரிவித்தனர். ஊரடங்கிற்கு முன்பு தேங்காய் ஒன்று ரூ.18 முதல் ரூ.20 வரை விற்றது குறிப்பிடத்தக்கது.

விலை வீழ்ச்சி

இதேபோல் தேங்காய் கொப்பரை கிலோ ரூ.90 முதல் ரூ.100 மற்றும் ரூ.110 என்ற விலைகளில் விற்பனை ஆன நிலையில் அதுவும் தற்போது தரத்திற்கு ஏற்ப ரூ.60, ரூ.65 என்ற விலைகளிலேயே விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகிறது. கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கொப்பரை தேங்காய்களை வாங்கும் வியாபாரிகள், அவற்றை இருப்பு வைத்து விலை உயர்ந்தவுடன் விற்பனை செய்கின்றனர். இதனால் வடகாடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்