கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வழிபாட்டு தலங்களுக்கு பழம், பூக்கள் கொண்டு வரக்கூடாது கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வழிபாட்டு தலங்களுக்கு பழம் மற்றும் பூக்கள் கொண்டு வரக்கூடாது என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-04 23:30 GMT
கடலூர், 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வழிபாட்டு தலங்களுக்கு பழம் மற்றும் பூக்கள் கொண்டு வரக்கூடாது என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு மிகாமல் உள்ள, கிராம பகுதிகளில் அமைந்துள்ள வழிபாட்டு தலங்களை திறந்து பொதுமக்கள் வழிபாடு நடத்த அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் கிராம பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவில், பள்ளி வாசல், தேவாலயங்களின் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் முன்னிலை வகித்தார்.

வழிபாட்டு தலங்கள்

கூட்டத்தில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறுகையில், அனைத்து வழிபாட்டு தல நிர்வாகிகளும் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் குறித்து அரசு தெரிவிக்கும் வழிமுறைகளை முறையாக பின்பற்றி வழிபாடு நடத்திட வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட நோய் தொற்று மண்டலங்களில் உள்ள வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி கிடையாது.

65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வழிபாட்டு தலங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். மேலும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபட வேண்டும். அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் வழிபாட்டு தலங்களுக்கு தேங்காய், பழங்கள், பூக்கள் கொண்டு வரக்கூடாது. சிலை ஊர்வலத்திற்கும் அனுமதி கிடையாது என்றார்.

இதில் கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா, மற்றும் வழிபாட்டு தல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்