பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்கூட்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்கூட்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-07-05 01:31 GMT
தேனி,

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும், விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் நீதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் நேற்று கண்டன ஆாப்பாட்டம் நடந்தது. தேனி மாவட்டத்தில் தேனி, அரண்மனைப்புதூர், தேவதானப்பட்டி, பெரியகுளம், போடி, ஓடைப்பட்டி ஆகிய 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனியில் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவது போல் கோஷங்கள் எழுப்பினர். அரண்மனைப்புதூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேவதானப்பட்டியில் மாவட்ட குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்கூட்டருக்கு பாடை கட்டி ஊர்வலமாக தூக்கி வந்தனர். அதற்கு முன் இறுதி ஊர்வலம் செல்வது போல் வேடமிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பியபடி நிர்வாகிகள் நடந்து சென்றனர்.

மேலும் செய்திகள்