கொரோனா தடுப்பு நடவடிக்கை: மாலிஸ் லைன் பகுதிக்கு ‘சீல்’

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாலிஸ் லைன் பகுதிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-07-05 23:30 GMT
கோத்தகிரி, 

கோத்தகிரி அருகே காளவாய் பகுதியில் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த மாலிஸ் லைன் பகுதியை சேர்ந்த தொழிலாளியிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவில் கொரோனா சந்தேகம் ஏற்பட்டதால், அவர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதேபோன்று மாலிஸ் லைன் பகுதியை சேர்ந்த செவிலியர், மதுரைக்கு சென்று திரும்பினார். முன்னதாக குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் அவரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் கொரோனா சந்தேகம் ஏற்பட்டதால், உடனடியாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதன் எதிரொலியாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாகவும் மாலிஸ் லைன் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. அங்கு பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் மேற்பார்வையில் சுகாதார மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வீடு, வீடாக...

இதேபோன்று கூடலூர் அருகே புரமணவயல் பகுதியில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு, கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ளவர்களிடம் சளி மாதிரி எடுத்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 13 வயது சிறுவனுக்கு கொரோனா சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அவனுக்கு ஊட்டி அரசு சேட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே புரமணவயல் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது கிருமி நாசினி தெளித்தல், பிளச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்