கொரோனா தடுப்பு நடவடிக்கை: சென்னையில் காய்ச்சல் முகாமில் 8 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னையில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்களில் 8½ லட்சம் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் 10,463 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2020-07-08 00:59 GMT
சென்னை,

சென்னையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வீடு, வீடாக தன்னார்வலர்கள் மூலம் காய்ச்சல் கண்டறியும் பணியும் நடக்கிறது. அந்தவகையில் கடந்த மே மாதம் 8-ந்தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை 13 ஆயிரத்து 212 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 8 லட்சத்து 50 ஆயிரத்து 184 பேர் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,501 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 95 ஆயிரத்து 668 பேர் பங்கேற்று உள்ளனர். இதுவரை சராசரியாக ஒரு காய்ச்சல் முகாமில் 64 பேர் கலந்துகொண்டு பரிசோதனை செய்துள்ளனர்.

காய்ச்சல் முகாமில் பங்கேற்றவர்களில் 40 ஆயிரத்து 175 பேருக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இதில் 35 ஆயிரத்து 937 பேருக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. இதில் 28.20 சதவீதம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதாவது, 10 ஆயிரத்து 463 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அண்ணாநகர் மண்டலத்தில் 3,109 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 2 ஆயிரத்து 175 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்