ஊரடங்கு உத்தரவால் சென்னையில் வேலையின்றி தவிக்கும் குதிரை ஓட்டிகள்

சென்னையில், ஊரடங்கு உத்தரவால் குதிரை ஓட்டிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

Update: 2020-07-08 22:15 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அறிவித்த போதிலும், திருமண விழாக்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மெரினா கடற்கரை மற்றும் திருமண விழாக்களையே நம்பி இருந்த குதிரை ஓட்டிகள் வேலையின்றி, வருமானம் இன்றி தவித்து வருவதுடன், குதிரைகளுக்கு போதுமான உணவு அளிக்க வசதியின்றி தவித்து வருகின்றனர்.

இது குறித்து 8 குதிரைகள் வைத்து பராமரிக்கும் குதிரைகளின் உரிமையாளர் கபாலி கூறியதாவது:-

சென்னை சேப்பாக்கத்தில் இருந்து மகாபலிபுரம் வரைக்கும் சுமார் 20 குடும்பத்தினர் 100-க்கும் மேற்பட்ட குதிரைகளை வைத்து பராமரித்து வருகின்றோம். பெரும்பாலும் இந்த குதிரைகளை ரெயில்வே பாலங்களுக்கு அடியில் கட்டி வைப்பது வழக்கம்.

எங்களுக்கு மிகப்பெரிய வாழ்வாதாரமாக விளங்குவது கடற்கரை மற்றும் திருமண விழாக்கள் தான். கடற்கரையில் குழந்தைகளை வைத்து ரவுண்ட் அடிப்பதற்கு 50 ரூபாயும், பெரியவர்களுக்கு 100 ரூபாயும் கட்டணமாக வாங்குவோம். திருமண விழாக்களை பொறுத்தவரையில், ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை கட்டணம் வசூலிப்போம். சாரட் வண்டியின் தன்மையை சில திருமண விழாக்களில் இதை விட கூடுதலாகவும் கட்டணம் வசூலிப்போம்.

இவை அனைத்தும் தற்போது கொரோனா தொற்று தடுப்புக்கான ஊரடங்கு உத்தரவால் முற்றிலும் முடங்கி போய் உள்ளன. ஆனால், குதிரைக்கு தேவையான உணவு பொருட்களை வாங்குவதற்கான செலவு குறைவது இல்லை. எனவே, மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

ஊரடங்கின் ஆரம்ப காலத்தில் கால்நடைத்துறையில் இருந்து சில மூட்டைகள் தவிடு வழங்கினர். அதற்கு பிறகு எதுவும் வழங்கப்படவில்லை. ஒரு மூட்டை தவிடு ரூ.1,000 ஆகிறது. ஒரு கட்டு புல் 150 முதல் 200 ரூபாய் ஆகிறது. தற்போது எந்த வருமானமும் இல்லாததால் குதிரை ஓட்டி சிறிது சிறிதாக சம்பாதித்து வைத்த நகைகளை அடகு வைத்து குதிரைகளுக்கு தவிடு, புல் வாங்கி போடுகிறோம். இருந்த போதும், குதிரைகள் “எப்படி இருந்த நான்! இப்படி ஆகிவிட்டேன்!” என்ற சினிமா வசனத்தை போன்று மெலிந்து காணப்படுகின்றன.

எங்களிடம் குதிரைகளை ஓட்டுபவர்கள் தற்போது மூட்டை தூக்கும் தொழில், கொத்தனார் வேலைக்கு செல்கின்றனர்.

குதிரை தொழிலை நம்பி, லாடம் அடிப்பவர்கள், குதிரைகளின் முடி வெட்டுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களது குடும்பமும் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறது. எனவே, அரசு எங்களுக்கு ஏதாவது நிதியுதவி அளிப்பதுடன், குதிரைகளுக்கு தேவையான தவிடு மூட்டைகள் மட்டுமாவது வழங்கினால் மகிழ்ச்சி அடைவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்