தேவூர் பகுதியில் தொடர் சாரல் மழை: 1000 ஏக்கர் பருத்தி செடிகளில் பஞ்சு நனைந்து சேதம் - விவசாயிகள் கவலை

தேவூர் பகுதியில் தொடர் சாரல் மழையால் 1000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி செடிகளில் பஞ்சு நனைந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2020-07-08 22:59 GMT
தேவூர், 

தேவூர் அருகே பாலிருச்சம்பாளையம், சென்றாயனூர், வட்ராம்பாளையம், கொட்டாயூர், கல்வடங்கம், குள்ளம்பட்டி, செட்டிப்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி, காவேரிப்பட்டி, மைலம்பட்டி, குஞ்சாம்பாளையம், அம்மாபாளையம், மோட்டூர், மேட்டுப்பாளையம், நல்லதங்கியூர், பொன்னம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் பருத்தி விதை வாங்கி வந்து விவசாய வயல்களில் டிராக்டர் மூலம் உழவு செய்து பாத்தி அமைத்து கூலித் தொழிலாளர்களை பயன்படுத்தி பருத்தி விதையை ஊன்றி சாகுபடி செய்தனர். இதையடுத்து நீர் பாய்ச்சுதல், களை வெட்டுதல், பருத்தி செடிகளுக்கு மண்அணைத்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை செய்து வந்தனர். அவ்வாறு சாகுபடி செய்யப்பட்டு 5 மாதங்கள் முடிந்துள்ள வயல்களில் பருத்தி காய்கள் காய்த்து பஞ்சு வெடிக்க தொடங்கி உள்ளது.

இதனால் விவசாயிகள் கூலித் தொழிலாளர்களை பயன்படுத்தி பருத்தி அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு அரசு பருத்திக்கான ஆதார விலை ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை நிர்ணயம் செய்தது. மேலும் கடந்த ஆண்டு வியாபாரிகள், விவசாயிகளிடம் பருத்தி கிலோ ரூ.60, ரூ.65-க்கு வாங்கி சென்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இந்த ஆண்டு அதிகளவில் பருத்தி சாகுபடி செய்தனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் வெளி மாநில, வெளிமாவட்ட வியாபாரிகள் வருகை இல்லாததால் இந்த ஆண்டு பருத்தி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.35 முதல் ரூ.50 வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்வதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது பருத்தி அறுவடை நடைபெறும் சமயத்தில் தேவூர் பகுதியில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி செடிகளில் பஞ்சு, மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒரு புறம் விலை வீழ்ச்சி, மறுபுறம் மழையால் சேதம் என்பதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என தேவூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்