மாவட்ட செய்திகள்
நடுரோட்டில் கவிழ்ந்த மினி லாரி; மதுபாட்டில்களை அள்ளி சென்ற ‘குடிமகன்கள்’

வேடசந்தூர் அருகே டயர் வெடித்து நடுரோட்டில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த மதுபாட்டில்களை ‘குடிமகன்கள்’ அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர்,

திண்டுக்கல் தாமரைப் பாடியில் உள்ள டாஸ்மாக் குடோனில் இருந்து வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி, எரியோடு, தென்னம்பட்டி ஆகிய மதுபான கடைகளுக்கு மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை, திண்டுக்கல் பொன்மாந்துறையை சேர்ந்த பரமசிவம் (வயது 40) என்பவர் ஓட்டினார்.

அவருடன் சுமைதூக்கும் தொழிலாளர்களான விஜயன் (50), குமரேசன் (40) ஆகியோரும் சென்றனர். திண்டுக்கல்- கரூர் 4 வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே உள்ள விட்டல்நாயக்கன்பட்டி என்னுமிடத்தில் மினிலாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மினி லாரியின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி, நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் அட்டை பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் சாலையில் விழுந்து நொறுங்கின. இதனால் மதுபானம் சாலையில் ஆறாக ஓடியது. மேலும் அட்டை பெட்டிகளுடன் மதுபாட்டில்கள் ஆங்காங்கே சாலையில் சிதறி கிடந்தன. இதனை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்தனர்.

பின்னர் அவர்கள், சாலையோரத்தில் தங்களது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை அள்ளி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களும் மோட்டார் சைக்கிள்களில் ‘குடிமகன்களும்‘ அங்கு படையெடுத்தனர். சிலர் தாங்கள் அணிந்திருந்த லுங்கியில் மதுபாட்டில்களை அள்ளி சென்றனர்.

மேலும் சிலர் சாலையில் துண்டுகளை விரித்து, அதில் மதுபானங்களை போட்டு கொண்டு சென்றனர். தாங்கள் கொண்டு வந்த பைகளிலும் எடுத்து சென்றனர். ஒரு சில குடிமகன்கள் அட்டை பெட்டிகளை அலசி பார்த்து, அதில் தாங்கள் விரும்பும் மதுபானங்களை தேர்வு செய்து எடுத்து சென்ற காட்சியும் அரங்கேறியது.

அதேநேரத்தில், விபத்தில் சிக்கி காயம் அடைந்த டிரைவர் உள்பட 3 பேரை மீட்க யாரும் முன்வரவில்லை என்பது வேதனையான விஷயமாகவே இருந்தது. விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார், சுமார் 20 நிமிடத்திற்கு பிறகு தான் அங்கு வந்தனர். போலீசார் வரும்வரை மதுபாட்டில்களை எடுத்து செல்வதிலேயே ‘குடிமகன்கள்‘ கண்ணும் கருத்துமாக இருந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கு திரண்டிருந்த குடிமகன்களை விரட்டினர்.

பின்னர் விபத்தில் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மினி லாரியில் கொண்டு சென்ற மதுபானத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் என கூறப்படுகிறது.

போலீசார் இன்னும் சிறிதுநேரம் தாமதமாக வந்திருந்தால் லாரியில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தையும் ‘குடிமகன்கள்’ அள்ளி சென்று இருப்பார்கள். உடைந்த பாட்டில்களை தவிர வேறு எந்த மதுபானங்களும் அங்கே இருந்திருக்காது. அந்த அளவுக்கு ‘குடிமகன்கள்‘ மதுபாட்டில்களை அள்ளி செல்வதில் ஆர்வம் காட்டினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்