சுருக்குமடி வலையை பயன்படுத்துவதை தடுக்கக்கோரி 20 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம்

சுருக்குமடி வலையை பயன்படுத்துவதை தடுக்கக்கோரி 20 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2020-07-13 01:41 GMT
திருவெண்காடு,

கடலில் சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இதை மீறி பலர் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகிறார்கள். இதை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதை கண்டித்தும், சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வானகிரி, கீழமூவர்கரை, மேலமூவர்கரை, நாயக்கர்குப்பம், தொடுவாய் உள்ளிட்ட 20 கிராம மீனவர்கள் சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மீனவ கிராம பொறுப்பாளர்கள் கூறியதாவது:-

சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளை கொண்டு மீன்பிடிப்பதால் கடல் வளம் முற்றிலும் பாதிக்கப்படும். இதனால் நாட்டில் வருங்காலங்களில் பருவநிலையில் கூட மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக, மத்திய அரசு நியமித்த விஞ்ஞானிகள் குழுவின் ஆய்வு அறிக்கை கூறுகிறது. எனவே சுருக்குமடி, இரட்டைமடி வலைகளை கொண்டு மீன்பிடிக்க கூடாது என மத்திய, மாநில அரசுகள் அதற்கு தடைவிதித்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம்.

சில கிராமங்களில் அரசால் தடை செய்யபட்ட வலைகளை கொண்டு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்துவருகின்றனர். எனவே உடனடியாக அதை தடுக்கக்கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்