வாலிபரிடம் மோட்டார் சைக்கிள் பறிப்பு: 3 பேருக்கு சிறை தண்டனை திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு

பெருமாநல்லூர் அருகே கத்தியை காட்டி வாலிபரிடம் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2020-07-15 23:27 GMT
திருப்பூர்,

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 22). இவருடைய நண்பர் செபாஸ்டியன். இவர்கள் இருவரும் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய கடந்த 21-7-2019 அன்று வந்துள்ளனர். பெருமாநல்லூர் அருகே குன்னத்தூர் ரோடு மேம்பாலத்துக்கு கீழ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி 2 பேரும் நின்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த பெருமாநல்லூர் தட்டான்குட்டையை சேர்ந்த ரஞ்சித்குமார்(24), தர்மராஜ்(39), வினோத்குமார்(24) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி சங்கரிடம் இருந்து செல்போன் மற்றும் அவருடைய மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு தப்பினார்கள். இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

3 பேருக்கு சிறை

இந்தநிலையில் ரஞ்சித்குமார், தர்மராஜ், வினோத்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன், வழிப்பறியில் ஈடுபட்ட ரஞ்சித்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், வினோத்குமார், தர்மராஜ் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் கூடுதல் அரசு வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார். 

மேலும் செய்திகள்