திருச்சூரில் கொரோனா தனிமை வார்டாக பயன்படுத்த சொந்த வீட்டை கொடுத்த பெண் போலீஸ்

திருச்சூரில் கொரோனா தனிமை வார்டாக பயன்படுத்த சொந்த வீட்டை பெண் போலீஸ் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-07-16 04:33 GMT
பெரும்பாவூர்,

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் காவல் நிலையத்தில் ஜான்சி (வயது 44) என்பவர் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு போர்க்குளம் என்ற இடத்தில் சொந்த வீடு உள்ளது. ஆனால் கடந்த சில வருடங்களாக ஜான்சி தனது குடும்பத்துடன் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

சிறப்பு விமானம்

கடந்த சில நாட்களுக்கு முன் காட்டக்காம்பாள் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பம் வளைகுடா நாட்டில் இருந்து அவசரமாக கிடைத்த அனுமதியுடன் சிறப்பு விமானம் மூலம் கேரளா வந்தது. காட்டக்காம்பாளில் இவர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. இதனால் அவர்கள் வாடகைக்கு வீடு தேடினர். ஆனால் கொரோனா பரவல் பீதி காரணமாக அவர்களுக்கு யாரும் வாடகைக்கு வீடு கொடுக்கவில்லை. 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்த பின்னர் வேண்டுமானால் வீடு தர முயற்சிப்பதாக ஒரு சிலர் கூறி உள்ளனர்.

இதனால் மழைக்காலத்தில் கூட்டை இழந்த பறவைகள் போல், அவர்கள் பரிதவித்து போய், தங்களுக்கு உதவி கோரி குன்னங்குளம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று உள்ளனர். அவர்களின் நிலைமையை உணர்ந்த ஜான்சி, அவர்களுக்கு உதவ முன்வந்தார்.

14 நாட்கள் தனிமைப்படுத்தல்

இதைத் தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதற்காக, போர்க்குளத்தில் தனது சொந்த வீட்டை தூய்மைப்படுத்தி வளைகுடாவில் இருந்து வந்த அந்த குடும்பத்தினருக்கு அவர் கொடுத்தார். வாடகை வீட்டுக்கே வழி இல்லாமல் கையறுநிலையில் இருந்த அவர்களுக்கு ஜான்சி இலவசமாக வீடு கொடுத்தது அவர்களுக்கு கண்ணீரை வரவழைத்தது. தற்போது அந்த குடும்பத்தினர் ஜான்சியின் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஜான்சி கூறுகையில், கொரோனா தொற்று அனைவரையும் நிலைகுலைய செய்து உள்ளது. எனவே இந்த கொரோனா பிரச்சினை முடியும்வரை இந்த வீட்டை தனிமை வார்டாக பயன்படுத்த அரசுக்கு வழங்க முடிவு செய்து உள்ளேன் என்றார். பெண் போலீஸ் ஜான்சி செய்த உதவியை கேள்விப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்