குமரியில் 95.06 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி மாநில அளவில் 9-வது இடம்

குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.06 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் 9-வது இடம் கிடைத்துள்ளது.

Update: 2020-07-17 05:08 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 10 ஆயிரத்து 72 மாணவர்களும், 11 ஆயிரத்து 897 மாணவிகளுமாக மொத்தம் 21 ஆயிரத்து 969 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 9 ஆயிரத்து 225 மாணவர்களும், 11 ஆயிரத்து 659 மாணவிகளுமாக மொத்தம் 20 ஆயிரத்து 884 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 91.59 சதவீதம் பேரும், மாணவிகளில் 98 சதவீதம் பேரும் ஆக மொத்தம் 95.06 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கல்வி மாவட்டம் வாரியாக...

குமரி மாவட்டத்தில் 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. கல்வி மாவட்டம் வாரியாக தேர்வு எழுதியவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 3172 மாணவர்களும், 3882 மாணவிகளுமாக மொத்தம் 7054 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 2934 மாணவர்களும், 3800 மாணவிகளுமாக மொத்தம் 6734 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 95.46 ஆகும்.

தக்கலை கல்வி மாவட்டத்தில் 2729 மாணவர்களும், 3300 மாணவிகளும் ஆக மொத்தம் 6029 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 2504 மாணவர்களும், 3225 மாணவிகளுமாக 5729 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 95.02 ஆகும்.

அதிக தேர்ச்சி

குழித்துறை கல்வி மாவட்டத்தில் 1833 மாணவர்களும், 2133 மாணவிகளுமாக மொத்தம் 3966 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 1663 மாணவர்களும், 2093 மாணவிகளுமாக 3756 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 94.70 ஆகும்.

திருவட்டார் கல்வி மாவட்டத்தில் 2338 மாணவர்களும், 2582 மாணவிகளுமாக மொத்தம் 4920 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 2124 மாணவர்களும், 2541 மாணவிகளும் மொத்தம் 4665 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த கல்வி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 94.81 ஆகும். கல்வி மாவட்ட அளவில் நாகர்கோவில் கல்வி மாவட்டம் அதிக சதவீதத்தை பெற்றுள்ளது.

அரசு பள்ளிகள் சாதனை

குமரி மாவட்டத்தில் 54 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 5084 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 4665 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று 91.76 சதவீதத்தை எட்டி சாதனை படைத்துள்ளன. மாநில அளவில் அரசு பள்ளிகள் மாணவ- மாணவிகள் தேர்ச்சி அடிப்படையில் குமரி மாவட்டத்துக்கு 5-வது இடம் கிடைத்துள்ளது. மாவட்ட அளவில் ஆண்கள் பள்ளிகளை சேர்ந்த 522 மாணவர்களும், பெண்கள் பள்ளிகளைச் சேர்ந்த 3059 மாணவிகளும், இருபாலர் இணைந்த பள்ளிகளில் 18 ஆயிரத்து 388 மாணவ மாணவிகளும் பிளஸ்-2 தேர்வு எழுதினர். அவர்களில் ஆண்கள் பள்ளிகளில் 481 பேரும், மகளிர் பள்ளிகளில் 3010 பேரும், இருபாலர் இணைந்த பள்ளிகளில் 17 ஆயிரத்து 393 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளில் கண் பார்வையற்ற 11 மாணவ-மாணவிகளும், காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 14 மாணவ-மாணவிகளும், கை, கால் ஊனமுற்ற மாணவ-மாணவிகள் 24 பேரும், பிற ஊனங்களை உடைய மாணவ-மாணவிகள் 36 பேரும் தேர்வு எழுதினர். அவர்களில் கண் பார்வையற்ற 10 பேரும் (90.91 சதவீதம்), காது கேளாத வாய் பேச முடியாத 14 பேரும் (100 சதவீதம்), கை, கால் ஊனமுற்ற 22 பேரும் (91.67 சதவீதம்), பிற ஊனங்களை உடைய 35 பேரும் (97.22 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

9-வது இடம்

கடந்த ஆண்டு நடந்த பிளஸ்-2 தேர்வில் குமரி மாவட்டம் 94.8 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 6-வது இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு 95.06 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 9-வது இடத்தை பிடித்துள்ளது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமன் கூறினார்.

தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானதும் மாணவ-மாணவிகள் கொடுத்திருந்த செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்திகளாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது. அதனால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் செல்போன்கள் மூலமாக தங்களது தேர்வு முடிவுகளை பார்த்தனர்.

மேலும் செய்திகள்