திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் முழுஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள் கட்டுப்பாட்டை மீறிய 226 வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின. ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறிய 226 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2020-07-20 01:29 GMT
திண்டுக்கல்,

தமிழகத்தில் கொரோனா வைரசால் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கொரோனா பரவலை தடுப்பதற்கு இந்த ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்காக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த மாதத்தின் 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன.

அதை அறிந்து மக்கள் முன்கூட்டியே அதாவது நேற்று முன்தினமே தேவையான பொருட்களை வாங்கினர். இறைச்சி, மீன் கடைகள், மதுக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதை பார்க்க முடிந்தது. மேலும் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. எனவே, நேற்று பெரும்பாலான மக்கள் முழு ஊரடங்கை கடைபிடித்து வெளியே வருவதை தவிர்த்தனர்.

வெறிச்சோடின

மேலும் முழு ஊரடங்கை முழுமையாக அமல்படுத்தும் வகையில், போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தலைமையிலான போலீசார் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் கெடுபிடியும் மக்கள் நடமாட்டத்தை குறைத்தது. இதன் காரணமாக திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, நத்தம் உள்பட மாவட்டம் முழுவதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் ஊரடங்கு மீறி சுற்றித்திரியும் நபர்களை கைது செய்வதற்கு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதேநேரம் முழு ஊரடங்கை கடைபிடிக்காமல் தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வகையில் நேற்று மாவட்டம் முழுவதும் 230 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து 215 மோட்டார் சைக்கிள்கள், 9 கார்கள், 2 ஆட்டோக்கள் என 226 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ஊரடங்கை மீறிய 3 கடைக்காரர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்