தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் ஏதுமின்றி முழு ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனால், சாலைகள் வெறிச்சோடின. வீடுகளை சிலர் இறைச்சி கடைகளாக மாற்றினர்.

Update: 2020-07-20 01:41 GMT
தேனி,

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்வுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதேநேரத்தில் இந்த மாதத்தில் (ஜூலை) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கட்டுப்பாடுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் முழுவதும் மருந்துக்கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. உழவர் சந்தைகள், காய்கறி கடைகளும் அடைக்கப்பட்டன. தனியார் மற்றும் பொது போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தேனி நகரில் பிரதான சாலைகளான கம்பம் சாலை, மதுரை சாலை, பெரியகுளம் சாலை ஆகிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. உத்தரவை மீறி சாலைகளில் உலா வந்தவர்களை போலீசார் எச்சரித்து, வழக்குப்பதிவு செய்தனர். போடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இறைச்சி விற்பனை

அதே நேரத்தில், தேனி, கண்டமனூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இறைச்சி விற்பனை நடந்தது. சிலர் வீடுகளை தேடிச் சென்று இறைச்சி வழங்கினர். சிலர் தங்களின் வீடுகளில் ஆடு, கோழி இறைச்சியை விற்பனை செய்தனர். வீடுகளில் ஆடுகள் வதை செய்யப்பட்டு இறைச்சி விற்பனை நடந்ததால், அத்தகைய வீடுகளை தேடிச் சென்று அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்கிச் சென்றனர்.

பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டாலும் குடியிருப்பு பகுதிகளில் மக்களின் நடமாட்டம் இயல்பாகவே இருந்தது. கட்டுப்பாட்டு பகுதிகளிலும் மக்கள் கொரோனா அச்சம் இன்றி உலா வந்தனர். எனவே, மற்ற நாட்களிலும் தடுப்பு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்