குளங்களின் கரைகளில், எல்லைக்கற்கள் தவறாக நடப்பட்டிருந்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

குளங்களின் கரைகளில் எல்லைக்கற்கள் தவறாக நடப்பட்டிருந்தால் ஊராட்சி செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

Update: 2020-07-20 01:43 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் குளம், குட்டைகள் தூர்வாரும் பணிகள் மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, செயற்பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் 157 குளம், குட்டைகள் உள்ளன. குடிமராமத்து திட்டத்தின் கீழ் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், பேராணம்பட்டு ஆகிய தாலுகாக்களில் உள்ள குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் குளத்தின் மொத்த பரப்பளவையும் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பின்னர் அங்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

குளத்தின் கரைகளில் எல்லைக்கற்கள் தெரியும் வகையில் நட்டு வைக்க வேண்டும். இதனை சர்வேயர் கொண்டு அளவீடு செய்ய வேண்டும். சர்வேயரின் அளவீட்டிற்கு மாறாக எல்லைக்கற்கள் நடப்பட்டிருந்தால் அதற்கு ஊராட்சி செயலாளரே முழுப்பொறுப்பாவார். எல்லைக்கற்கள் தவறாக நடப்பட்டிருந்தால் ஊராட்சி செயலாளரை பணியில் இருந்து நீக்கம் செய்யும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பணியில் ஈடுபட்டவர்கள் கூட்டு பொறுப்பு ஏற்க வேண்டும். கரையை பலப்படுத்தும் பணிகளை கரையின் பரிமாணங்கள் சரியான அளவில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். கரையை சுற்றி உள்புறத்திலும், வெளிப்புறத்திலும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். இவை குளங்களுக்கு இயற்கையான வேலியாக அமையும்.

கரைகளிலும், குளங்களிலும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். குளத்தின் உட்புறம், வெளிப்புற பகுதியை முறையாக பராமரிக்க வேண்டும். தற்போது பெய்த மழையில் ஏற்கனவே பலப்படுத்தப்பட்ட குளங்களின் கரைகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதனை கண்டறிந்து கூடுதலாக பலப்படுத்தப்பட வேண்டும். அனைத்து குளங்களிலும் பணிகள் குறித்த விவரங்கள் அடங்கிய பலகைகள் வைக்க வேண்டும். அதில், நீரின் கொள்ளளவு லிட்டரிலும் மற்றும் பரப்பளவை ஏக்கரிலும் குறிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சி திட்ட உதவி செயற்பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்