பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மணல் லாரி உரிமையாளர்கள் மாதிரி பட்ஜெட், அல்வா தயாரித்து போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாதிரி பட்ஜெட், அல்வா தயாரித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-25 00:53 GMT
பூந்தமல்லி,

கொரோனா காலத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனை கண்டித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் தலைமையில் நேற்று சென்னை வானகரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து மாதிரி பட்ஜெட் மற்றும் அல்வா தயாரிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய பெட்ரோலியத்துறை மந்திரிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என கோரிக்கையும் வைத்தனர்.

இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:-

மத்திய அரசு தொடர்ந்து 25 நாட்களாக டீசல் விலையை உயர்த்தி வருகிறது. பொதுமக்கள் சார்பாக இதை வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் என்று கூறி உள்ளார். ஆனால் இதுவரை கொண்டு வரவில்லை. இதனால் மாதத்துக்கு ரூ.53 ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது.

மத்திய அரசு எப்போதும் பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு அல்வா தயாரிப்பது வழக்கம். அதுபோல் நாங்கள் மாதிரி பட்ஜெட் மற்றும் அல்வா தயாரித்து உள்ளோம். இந்த அல்வாவுடன், நாங்கள் தயாரித்த மாதிரி பட்ஜெட்டையும் மத்திய பெட்ரோலிய துறை மந்திரிக்கு அனுப்பி வைக்க உள்ளோம். ஆண்டுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு 2 முறை மட்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்