10 கிலோ ரூ.60-க்கு விற்பனை விலை வீழ்ச்சியால் இனிக்காமல் போன கொய்யா பழம் விவசாயிகள் கவலை

ஊரடங்கால் வெளியூர் வியாபாரிகள் வராததால் 10 கிலோ கொய்யாபழம் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர்.

Update: 2020-07-27 23:25 GMT
கடலூர், 

பண்ருட்டி தாலுகா அண்ணாகிராமம் ஒன்றிய பகுதியில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்துறையூர், சின்னப்பேட்டை, கரும்பூர், உறையூர், எனதிரிமங்கலம், ரெட்டிக்குப்பம், கண்டரக்கோட்டை, பூண்டி, கட்டமுத்துப்பாளையம், புலவனூர், வரிஞ்சிப்பாக்கம், மாளிகைமேடு, சூரக்குப்பம் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் கொய்யா சாகுபடி செய்திருந்தனர். குறிப்பாக லக்னோ சிவப்பு, வெள்ளை கொய்யா அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். நாட்டு கொய்யாவும் பயிரிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் வரையுள்ள காலங்கள் தான் கொய்யா அறுவடை காலம். அதன்படி தற்போது அறுவடை நடந்து வருகிறது. ஆனால் இந்த கொய்யா பழங்களை வாங்க வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதனால் விவசாயிகளே கொய்யா பழங்களை அறுவடை செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து சென்னை, திருச்சி போன்ற இடங்களுக்கு தான் அதிக அளவில் பழங்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.

விலை வீழ்ச்சி

ஆனால் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வெளி இடங்களுக்கு பழங்களை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் கொய்யா பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 10 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை வியாபாரிகள் வாங்கி ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்து வருகின்றனர். இருப்பினும் பெருமளவில் கொய்யா விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. போதிய விலை இல்லை என்பதால் சிலர் மரத்தில் இருந்து பழங்களை பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் மரத்திலேயே கொய்யா பழம் பழுத்து அழுகி வீணாகி வருகிறது.

நஷ்டம்

இது பற்றி திருத்துறையூரை சேர்ந்த விவசாயி ஆதவன் கூறுகையில், இந்த காலம் தான் எங்களுக்கு வருமானம் கிடைக்கும். 10 கிலோ கொய்யா பழம் கொண்ட ஒரு பெட்டி ரூ.400 வரை விற்பனை செய்தோம். குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தான் அதிக அளவில் வியாபாரிகள் வந்து வாங்கிச்செல்வார்கள்.

ஆனால் இப்போது கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால் கொய்யா பழங்களை வாங்க வியாபாரிகள் வரவில்லை. ஒரு சில உள்ளூர் வியாபாரிகள் தான் வந்து வாங்கிச் செல்கிறார்கள். இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு பெட்டி ரூ.60 அல்லது 70-க்கு தான் விற்பனையாகி வருகிறது. இது எங்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே இதற்கு அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கொள்முதல் செய்ய வேண்டும்

இது பற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மாதவன் கூறுகையில், ஊரடங்கு உத்தரவால் வெளி மாவட்டங்களுக்கு பழங்களை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். மேலும் சில விவசாயிகள் பழங்களை பறிக்காமலேயே விட்டு விட்டனர். அந்த பழங்கள் அழுகி வருகிறது. இதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். ஆகவே இதை தோட்டக்கலைத்துறையினர் கொள்முதல் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொய்யா பழத்தை பயன்படுத்தி ஜாம், பழரசம் தயார் செய்யும் தொழிற்சாலையை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என்றார். மற்ற விவசாயிகளும் கொய்யா பழத்தை அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்