இறுதி தேர்வு எழுதாத பிளஸ்-2 மாணவர்களுக்கு மறுதேர்வு 12 மையங்களில் நடந்தது

கடலூர் மாவட்டத்தில் இறுதி தேர்வு எழுதாத பிளஸ்-2 மாணவர்களுக்கு நேற்று 12 மையங்களில் மறுதேர்வு நடந்தது.

Update: 2020-07-27 23:32 GMT
கடலூர், 

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதிநாள் தேர்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சில மாணவர்கள் எழுதவில்லை. கடலூர் மாவட்டத்தில் 10 மாணவர்களும், 22 தனித்தேர்வர்களும் எழுதவில்லை. இந்த தேர்வை எழுத முடியாத மாணவர்களின் நலன்கருதி, அவர்களுக்கு மறுதேர்வு ஜூலை 27-ந்தேதி (அதாவது நேற்று) நடத்தப்படும் என்றும், தேர்வை மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே எழுதிக்கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்தது.

இதையடுத்து இந்த தேர்வுக்கான புதிய நுழைவு சீட்டினை இணைய தளம் மற்றும் அவரவர் படித்த பள்ளிகளிலேயே பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்தனர். மாவட்டத்தில் மறுதேர்வை எழுத 25 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.

12 மையங்கள்

இதையடுத்து நேற்று மறுதேர்வு நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் மறுதேர்வை மாணவர்கள் எழுத வசதியாக 12 மையங்கள் அமைக்கப்பட்டது. இந்த தேர்வை எழுதுவதற்காக 9 மாணவர்கள், 16 தனித்தேர்வர்கள் என 25 பேர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு காலை 9 மணிக்கே சென்றனர்.

முன்னதாக மாணவர்கள் அனைவரும் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து கொண்டனர். மேலும் ஆசிரியர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் மாணவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதித்தனர். அன்பிறகே மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மதிப்பீடு

பின்னர் காலை 10 மணிக்கு அனைவருக்கும் வினாத்தாள் கொடுக்கப்பட்டு, அதை படித்து பார்க்க 15 நிமிடம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து 10.15 மணிக்கு விடைத்தாள் கொடுக்கப்பட்டது. பிறகு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதினர். தேர்வின் போது மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், மறுதேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு மையத்துக்கு கொண்டு சேர்க்கப்படும். நாளை (அதாவது இன்று) மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற உள்ளது. மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், அதன் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றார்.

மேலும் செய்திகள்