சிவசேனாவுடன் கூட்டணி அமைந்தாலும் தேர்தல்களில் இணைந்து போட்டியிட மாட்டோம் சந்திரகாந்த் பாட்டீல் திட்டவட்டம்

சிவசேனாவுடன் கூட்டணி அமைந்தாலும் இனிமேல் தேர்தல்களில் இணைந்து போட்டியிட மாட்டோம் என பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

Update: 2020-07-28 19:59 GMT
மும்பை,

மராட்டிய மாநில பாரதீய ஜனதா செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் மாநில நிர்வாகிகளிடம் பேசிய கட்சி தலைவர் ஜே.பி. நட்டா பாரதீய ஜனதா தனித்து ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு கட்சியை வளர்க்குமாறு கூறினார். மேலும் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவை பலப்படுத்துமாறும் தொிவித்தார்.

இந்தநிலையில் சிவசேனா- பா.ஜனதா கூட்டணி மீண்டும் அமைந்தாலும் இனிமேல் 2 கட்சிகளும் தேர்தலில் சேர்ந்து போட்டியிடாது என பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

முதல்-மந்திரி பதவியை தர முடியாது

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

பா.ஜனதா நாடாளுமன்ற குழு மாநிலத்தின் நலன் கருதி சிவசேனாவுடன் கூட்டணி அமைக்குமாறு கூறினால், ஒரே ஒரு விஷயத்தில் தெளிவாக உள்ளோம். இனிமேல் இரு கட்சிகள் (பாரதீய ஜனதா, சிவசேனா) கூட்டணி அமைந்தாலும் நாங்கள் எந்த தேர்தலிலும் சேர்ந்து போட்டியிடமாட்டோம். கடந்த 5 ஆண்டுகளாக சிவசேனாவுடன் கூட்டணியில் இருந்தோம். 2019 தேர்தலுக்கு பிறகு அதிக மந்திரி பதவிகளை அவர்களுக்கு வழங்க தயாராக இருந்தோம்.

பாரதீய ஜனதா தேசிய கட்சி, முதல்-மந்திரி பதவியை பிராந்திய கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. இங்கு இதை செய்தால் இதே கொள்கையை மற்ற மாநிலங்களிலும் பின்பற்றிய வேண்டியது ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்