கொரோனாவுக்கு தி.மு.க. பிரமுகர் பலி ஒரே நாளில் அதிகபட்சமாக 128 பேருக்கு தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார். ஒரே நாளில் அதிகபட்சமாக 128 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

Update: 2020-07-29 06:38 GMT
கறம்பக்குடி, 

ஆட்கொல்லி வைரசான கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் தாக்கம் மற்றும் ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பறிபோய்விட்டது. புதுக் கோட்டை மாவட்டத் தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை வெளியிடப்பட்ட பட்டியலில் இதுவரை இல்லாத வகையில் அதிக பட்சமாக ஒரே நாளில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி யாகி இருந்தது.

இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,844 ஆக உயர்ந்து 2 ஆயிரத்தை நெருங்குகிறது. நேற்று ஒரே நாளில் 63 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 1,067 ஆக உயர்ந்துள்ளது. 756 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தி.மு.க. பிரமுகர் சாவு

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப் பட்ட கறம்பக்குடி அருகே உள்ள சூரியன்விடுதியை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 60) நேற்று உயிரிழந்தார். தி.மு.க. பிரமுகரான இவர் வாண்டான்விடுதி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் ஆவார். மேலும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததை தொடர்ந்து, அவருடைய உடல் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து திருச்சியிலேயே அடக்கம் செய்யப்பட்டது. கறம்பக்குடியில் ஏற்கனவே நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கொரோனாவுக்கு பலியான நிலையில் நேற்று தி.மு.க. பிரமுகர் இறந்த சம்பவம் கறம்பக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நேற்று கறம்பக்குடியில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஒருவர், பந்துவக்கோட்டையை சேர்ந்த 2 பேர், அழகன்விடுதியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்