வாணியம்பாடியில் சமூக விலகலை கடைபிடிக்காத வங்கிகள் மீது நடவடிக்கை - உதவி கலெக்டர் எச்சரிக்கை

வாணியம்பாடியில் சமூக விலகலை கடைபிடிக்காத வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-07-29 08:39 GMT
வாணியம்பாடி, 

வாணியம்பாடி சி.எல்.சாலை பகுதியில் உதவி கலெக்டர் காயத்ரிசுப்பிரமணி, பறக்கும் படை சப்-கலெக்டர் சரஸ்வதி மற்றும் வருவாய்துறையினர் நடந்து சென்று முககவசம் அணிவது குறித்து விளக்கி கூறி, அங்கு அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிறப்பு பரிசோதனை முகாமை பார்வையிட்டனர்.

தொடர்ந்து அதே சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட 2 வங்கிகளுக்கு சென்றபோது அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்காமல் ஏ.டி.எம். எந்திரம், பென்ஷன் வழங்கும் பகுதிகளில் அளவுக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருந்தனர். அதில் பலர் முககவசம் அணியாமலும் இருந்தனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்களை அழைத்து பலமுறை எச்சரிக்கை விடுத்தும் இப்படி தனிமனித இடைவெளி விலகல் இல்லாமலும், வாடிக்கையாளர்களுக்கு போதிய வசதி செய்யாமலும் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதேநிலை தொடர்ந்து நீடித்தால் வங்கிக்கு சீல் வைக்கும் நிலை ஏற்படும். எனவே வாடிக்கையாளர்களுக்கு முறையான பாதுகாப்பை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆய்வின் போது கிராம நிர்வாக அலுவலர்கள் சற்குணகுமார், திலீப்குமார், சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்