புனேயில் சாதிய வன்முறைக்கு காரணமான வழக்கில் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கைது

புனேயில் சாதிய வன்முறைக்கு காரணமான வழக்கில் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2020-07-29 21:37 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் பீமா-கோரேகாவில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி போர் வெற்றி நினைவு தினத்தில் திடீரென சாதிய வன்முறை ஏற்பட்டது. இதற்கு முந்தைய நாள் நடந்த எல்கர் பரிஷத் மாநாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதே வன்முறைக்கு காரணம் என்று கூறி, அந்த மாநாட்டில் பங்கேற்ற இடதுசாரி சிந்தனையாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் புனே போலீசார் 2018-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி குற்றப்பத்திரிகையையும், கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி துணை குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணை கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கப்பட்டது. ஏப்ரல் 14-ந்தேதி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக ஆனந்த் டெல்டுப்டே மற்றும் கவுதம் நவ்லகா ஆகியோரை கைது செய்தனர்.

பேராசிரியர் கைது

இந்தநிலையில், எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை இணை பேராசிரியராக பணிபுரிந்து வரும் ஹனி பாபு முஷாலியார்வீத்தில் தராயில் (வயது54) என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் அதிரடியாக கைது செய்தனர்.

5 நாட்கள் விசாரணைக்கு பிறகு அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவர் நக்சல் நடவடிக்கைகள் மற்றும் மாவோயிஸ்ட் சித்தாந்தங்களை பிரசாரம் செய்து வருவதாகவும், இந்த வழக்கில் கைதான மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் மும்பையில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் பேராசிரியர் ஹனி பாபு ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்