முதுமலை காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரிப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்து உள்ளது.

Update: 2020-07-29 23:18 GMT
ஊட்டி,

ஆண்டுதோறும் ஜூலை மாதம் 29-ந் தேதி சர்வதேச புலிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. சர்வதேச புலிகள் தினத்தையொட்டி ஊட்டியில் உள்ள முதுமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் புலிகளின் வாழ்விடங்களை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கம் ஆன்லைன் மூலம் நேற்று நடைபெற்றது. இதனை கள இயக்குனர் கவுசல் தொடங்கி வைத்தார். இதில் துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கூறியதாவது:-

முதுமலை புலிகள் காப்பகம் உள் மற்றும் வெளி மண்டலத்தில் 688 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதிகளை கொண்டு உள்ளது. இந்த வனப்பகுதியில் வாழும் புலிகளை பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், புலிகளின் வாழ்விடங்களை பாதுகாப்பது, மனித-வனவிலங்கு மோதலை தடுப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. உள் மண்டலத்தில் ஒவ்வொரு 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 8 புலிகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த புலிகள் கணக்கெடுப்பில் முதுமலை புலிகள் காப்பகத்தில் 103 புலிகள் வசிப்பது கண்டறியப்பட்டது. இந்தியாவில் அதிக புலிகள் உள்ளதில் 6-வது இடத்தில் முதுமலை புலிகள் காப்பகம் இருக்கிறது. இந்த வனப்பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை ஒப்பிடும் போது, தற்போது புலிகள் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்து உள்ளது.

வன பாதுகாப்பு சட்டத்தின் படி ஏதேனும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுகிறதா என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வன பாதுகாப்பு நடவடிக்கையால் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முதுமலை புலிகள் காப்பகத்தை தவிர்த்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள மற்ற வனப்பகுதிகளில் 40 முதல் 50 புலிகள் வரை வாழ்ந்து வருகின்றன என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்