ஈரோட்டில் கொரோனாவுக்கு முதியவர் பலி புதிதாக 23 பேருக்கு தொற்று உறுதி

ஈரோட்டில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார். புதிதாக 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-07-30 01:35 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியானார். ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த 75 வயதான அவர் கொரோனா தொற்று உறுதியானதால் கடந்த 25-ந் தேதி பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏற்கனவே மாவட்டத்தில் பெருந்துறையை சேர்ந்த 70 வயது முதியவர், ஈரோடு வி.வி.சி.ஆர்.நகரை சேர்ந்த 38 வயது பெண், கருங்கல்பாளையத்தை சேர்ந்த 44 வயது பெண், திருநகர் காலனியை சேர்ந்த 58 வயது ஆண், முள்ளாம்பரப்பை சேர்ந்த 74 வயது முதியவர், மூலப்பாளையத்தை சேர்ந்த 33 வயது ஆண், கருங்கல்பாளையத்தை சேர்ந்த 85 வயது முதியவர், கொத்துக்காரன்வீதியை சேர்ந்த 45 வயது ஆண் என 8 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்த நிலையில் முதியவர் உயிரிழந்ததால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

23 பேருக்கு கொரோனா

தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 680 ஆக உயர்ந்தது. நேற்று 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

இதுவரை மொத்தம் 471 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்தனர். 200 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்