புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அரசு மகளிர் கல்லூரியில் ஓரிரு நாட்களில் தொடக்கம்

புதுக்கோட்டையில், கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக அரசு மகளிர் கல்லூரியில் அதற்கான மையம் ஓரிரு நாட்களில் தொடங்கப்படுகிறது.

Update: 2020-07-30 06:28 GMT
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது ராணியார் அரசு மருத்துவமனை, பழைய அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மற்ற இடங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்க தனி மையம் உள்ளது.

அதுபோல புதுக்கோட்டையிலும் சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவின்பேரில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி, தாசில்தார் முருகப்பன் மற்றும் அதிகாரிகள் நேற்று அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மேற்கொண்டனர். மேலும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ள கட்டிடத்தை பார்வையிட்டனர்.

கூடுதல் படுக்கை வசதிகள்

இந்த சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகளுக்காக 100 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் சித்த மருத்துவ குழுவினருக்கான வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது. இந்த மையத்தில் சிகிச்சை ஓரிரு நாட்களில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல கொரோனா நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவத்தில் சிகிச்சை அளிக்க கூடுதலாக படுக்கை வசதிகள் அரசு கல்வியியல் கல்லூரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டிடத்திலும், மன்னர் கல்லூரியிலும் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்