மருந்து வாங்கிச் சென்றவர்களின் நிலை என்ன? 318 மருந்து கடைகளில் தகவல் சேகரிப்பு

மாவட்டத்தில் உள்ள 318 மருந்து கடைகளில், மருந்து வாங்கிச் சென்றவர்களின் நிலை என்ன? என்பது குறித்து தகவல் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2020-07-30 06:52 GMT
கரூர், 

கரூர் மாவட்டத்தில், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக மருந்து வாங்கிச்செல்வோரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், என்ன மாத்திரைகள் வாங்கினார்கள் என்ற தகவல்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறு பதிவு செய்யப்படுகின்றதா என்று சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நேற்று கரூர் நகராட்சியில் உள்ள 75 மருந்தகங்கள், குளித்தலை நகராட்சியில் உள்ள 22 மருந்தகங்கள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 150 மருந்தகங்கள், 11 பேரூராட்சிகளில் 71 மருந்தககள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 318 ஆங்கில மருந்து கடைகள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் மருந்து வாங்கிச் சென்றவர்களின் நிலை என்ன? என்பது குறித்து தகவல் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மருத்துவ பரிசோதனை

நகராட்சி பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்களும், ஊரகப்பகுதிகளில் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களும் தினந்தோறும் மருந்தகங்களை ஆய்வு செய்து, சளி, காய்ச்சல், இருமல் காரணங்களுக்காக மருந்து வாங்கிச்சென்றவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து நகராட்சி ஆணையர்களுக்கும், உதவி இயக்குனர்களுக்கும் (ஊராட்சிகள், தணிக்கை) தினமும் அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மருந்து, மாத்திரை வாங்கியவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிய சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் வளர்ச்சித்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருந்து, மாத்திரை வாங்கியவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது கொரோனா தொற்று அறிகுறி தெரிந்தாலோ அவர்களுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எந்த வகையிலும், கொரோனா தொற்று பரவி விடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்