குழந்தை கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரிக்கை

குழந்தை கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-07-31 00:49 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை போலீஸ் மண்டபத்தில், மனித கடத்தல் தடுப்பு தொடர்பாக போலீசாருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமை தாங்கி, கருத்தரங்கை தொடங்கி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா முன்னிலை வகித்தார்.

அப்போது டி.ஐ.ஜி. முத்துசாமி பேசுகையில், ஆட்கள் கடத்தல் சம்பவங்களை நடைபெறாமல் தடுக்க போலீசார் விழிப்பாக பணியாற்ற வேண்டும். கடத்தல் சம்பவங்கள் குறித்து புகார் வந்தால், உயர் அதிகாரிகளிடம் உடனடியாக தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தை கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். குழந்தை கடத்தல் சம்பவங்களில், போலீசார் அலட்சியமாக செயல்பட கூடாது. மேலும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுடன், இணைந்து போலீசார் பணியாற்ற வேண்டும், என்றார்.

முன்னதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி வரவேற்று பேசினார். இந்த கருத்தரங்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கருத்தரங்கில் பங்கேற்றனர். மேலும் காணாமல் போன 2 மாணவிகளை கண்டுபிடித்ததற்காக செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமாருக்கு, டி.ஐ.ஜி. பரிசு வழங்கினார். முடிவில் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்