ஆந்திராவில் கிருமிநாசினி திரவம் குடித்து 13 பேர் பரிதாப சாவு

ஆந்திராவில் போதைக்காக கிருமிநாசினி திரவம் குடித்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2020-07-31 23:07 GMT
அமராவதி,

கொரோனா ஊரடங்கு காரணமாக ஆந்திராவில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால், நாட்டு மதுவகைகள் மற்றும் கள்ளச்சாராயம் போன்றவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த போலி மதுபானங்களின் பட்டியலில், தற்போது கொரோனா பரவலை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் கிருமிநாசினி (சானிடைசர்) திரவமும் இணைந்துள்ளது.

அதில் இருக்கும் ஆல்கஹாலுக்காக இதை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கிருமிநாசினி திரவத்துடன் தண்ணீர் மற்றும் குளிர் பானங்களை சேர்த்து குடித்து போதை ஏற்றி வருகின்றனர். ஆந்திராவின் பல மாவட்டங்களில் இந்த பழக்கம் நீடித்து வருகிறது.

மேலும் சிலருக்கு சிகிச்சை

இந்த நிலையில் பிரகாசம் மாவட்டத்தின் குரிச்சேடு, பமரூ கிராமங்களில் நேற்று முன்தினம் இரவில் ஏராளமானோர் கிருமிநாசினி திரவத்தை போதைக்காக குடித்துள்ளனர். இதில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் குரிச்சேடு கிரமத்தில் உள்ள ஒரு கோவிலில் யாசகம் எடுத்து வந்த 2 பேர் உடனடியாக மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.

அப்பகுதியை சேர்ந்த மற்றொருவர் டார்சி நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். நேற்று காலையில் மேலும் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைப்போல பமரூ கிராமத்தை சேர்ந்த 3 பேர் நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் சாலையில் ஆங்காங்கே கிடந்தன.

இவர்களை தவிர மேலும் சிலர் பல்வேறு உடல் உபாதைகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி

இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். வெறும் கிருமி நாசினி மட்டும் குடித்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டதா? அல்லது அதனுடன் வேறு நச்சுப்பொருள் ஏதும் கலந்து குடித்தார்களா? என்பதை அறிய அந்த பாட்டில்களை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனா பரவல் காரணமாக அந்த கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்படியிருந்தும் இந்த கிருமிநாசினி திரவம் எங்கிருந்து கிடைத்தது? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சித்தார்த் கவுஷல் தெரிவித்தார்.

கிருமி நாசினி திரவம் குடித்து 13 பேர் பலியான சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு மீது தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தில் மதுபானங்களின் விலையை 300 சதவீதம் வரை உயர்த்தியதால் மக்கள் கள்ளச்சாராயம், கிருமிநாசினி போன்றைவ குடித்து பலியாகி வருவதாக அவர் தெரிவித்து உள்ளார்.

இவ்வாறு கடந்த 14 மாதங்களில் ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக கூறியுள்ள சந்திரபாபு நாயுடு, இந்த சம்பவத்துக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்