இந்து மதத்தை இழிவுபடுத்தி பேச்சு சினிமா இயக்குனர் வேலுபிரபாகரன் கைது மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிய வழக்கில் சினிமா இயக்குனர் வேலுபிரபாகரனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-08-01 00:09 GMT
சென்னை,

‘பாரத் முன்னணி’ என்ற அமைப்பின் நிர்வாகி சிவாஜி, சினிமா இயக்குனர் வேலு பிரபாகரன்(வயது 64) மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘ சினிமா இயக்குனர் வேலு பிரபாகரன், ‘யூடியூப்’ சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்துக்கள் பற்றியும், இந்து மதத்தை பற்றியும் அவதூறாக பேசி உள்ளார். முருக கடவுள் பற்றியும், அவருடைய வேல் பற்றியும் இழிவான கருத்துகளை பதிவு செய்து உள்ளார். கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறு தகவல்களை பரப்பி போலீஸ் நடவடிக்கைக்கு உள்ளான ‘கருப்பர் கூட்டம்’ அமைப்புக்கு ஆதரவாகவும் அவர் பேசி உள்ளார். அவரது பேட்டி இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று கூறப்பட்டு இருந்தது.

கைது நடவடிக்கை

இந்த புகார் மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசார் 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வேலு பிரபாகரன் மதுரவாயில் வெங்கரேஷ்வரா நகர் மெயின் ரோட்டில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். போலீசார் நேற்று காலை அவரை கைது செய்து, மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்