கடையநல்லூரில் தொழிலாளி கொலையில் 5 பேர் கைது உடலை வாங்க மறுத்து போராட்டம்

கடையநல்லூரில் தொழிலாளி கொலையில் 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் அவரது உடலை வாங்க மறுத்து நேற்று போராட்டம் நடைபெற்றது.

Update: 2020-08-01 01:14 GMT
கடையநல்லூர்,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 55). கூலி தொழிலாளி. இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த மாடசாமி (50) என்பவருக்கும் இடையே இடம் சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் செல்லத்துரை அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பின்னர் போலீசார் வந்து செல்லத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கொலையில் தொடர்புடையவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மங்கம்மா சாலையில் திரண்டு நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரேத பரிசோதனை செய்யப்பட்ட செல்லத்துரையின் உடலை வாங்க மறுத்து நேற்று உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சக்திவேல் (புளியங்குடி), கோகுலகிருஷ்ணன் (தென்காசி) ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

5 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாடசாமி மற்றும் மேல கடையநல்லூர் வேதக்கோவில் தெருவை சேர்ந்த புகாரி (எ) இசக்கி மகன் சுரேஷ் (32), கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் அணிஸ் (19), மேல கடையநல்லூர் இந்திரா நகர் புது காலனியை சேர்ந்த முருகையா மகன் காளிமுத்து (38), மாரியப்பன் மகன் பேச்சிமுத்து (33) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்