தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாற்று இடம் வழங்க மக்கள் கோரிக்கை

தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து அங்கு வசித்த மக்கள் திறந்தவெளியில் வசிப்பதால், தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-08-01 01:19 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி தபால் தந்தி காலனி 1-வது தெரு பக்கிள் ஓடையை ஒட்டி உள்ள காலி இடங்களில் சிலர் குடிசை அமைத்து வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில், அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதனால் அந்த பகுதியில் வசித்து வந்த 20 குடும்பத்தினர் திறந்த வெளியில் சமையல் செய்து சாப்பிட்டு, குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இதையடுத்து அவர்கள், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

அந்த மனுவில், தூத்துக்குடி தபால் தந்தி காலனி முதல் தெரு பக்கிள் ஓடையின் அருகே உள்ள காலியிடங்களில் குடிசை அமைத்து சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்கள் குடிசைகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன.

மாற்று இடம் வழங்க...

தற்போது குடியிருப்பதற்கு இடவசதியின்றி தவிப்பதோடு, எங்களது வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உடமைகள் அனைத்தும் வெட்ட வெளியில் கிடக்கிறது. எங்களுக்கு அரசு சார்பில் மாற்று இடவசதி மற்றும் நிலம் ஒதுக்கீடு செய்து, எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

மேலும் செய்திகள்