பெரம்பலூரில், கொரோனாவுக்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி - மேலும் 55 பேருக்கு தொற்று

பெரம்பலூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கொரோனாவுக்கு பலியானார். மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-07-31 22:00 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சி துறையின் உதவி இயக்குனரான, பெரம்பலூர் நான்கு ரோடு அருகேயுள்ள மின் நகரை சேர்ந்த மனோகர் (வயது 63) கொரோனாவால் பாதிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் மனோகர் பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் மனோகரனின் மனைவியும், மகனும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. லாடபுரம், அந்தூர், பூலாம்பாடி, செட்டிகுளம், காரியானூர், துறைமங்கலம், குரும்பலூர், பாடாலூர், எஸ்.குடிக்காடு, தழுதாழை, காந்தி நகர், பெரம்பலூர் கிருஷ்ணா நகர், விவேகானந்தர் நகர், சாமியப்பா நகர், கல்யாண் நகர், சின்ன வெண்மணி, பாளையம், நாரணமங்கலம், கோனேரிபாளையம், அயன்பேரையூர், பாலையூர், எசனை, களரம்பட்டி, திருவாளக்குறிச்சி, கள்ளப்பட்டி, தொண்டபாடி, சிறுநிலா, அம்மாபாளையம், மங்களமேடு, எழுமூர், புதுக்குறிச்சி, ரஞ்சன்குடி, மேலப்புலியூர், நெய்குப்பை ஆகிய பகுதிகளை சேர்ந்த 18 பெண்கள் உள்பட 55 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 422-ல் இருந்து 477 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 914 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று திருமானூர், செந்துறை ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தலா ஒருவரும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 2 பேரும் என மொத்தம் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்