ஈரோடு மாவட்டத்தில் 2 வயது குழந்தை உள்பட 33 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 724 ஆக உயர்வு

ஈரோடு மாவட்டத்தில் 2 வயது குழந்தை உள்பட 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்தது.

Update: 2020-08-01 06:30 GMT
ஈரோடு,

ஈரோட்டில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மொத்தம் 690 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் ஒருவர் வெளிமாவட்ட பட்டியலில் இருந்து ஈரோடு பட்டியலில் சேர்க்கப்பட்டார். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 691 ஆக உயர்ந்தது.

இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் மட்டும் 20 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிலும் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் ஜோசப்தோட்டம் பகுதியில் 2 வயது பெண் குழந்தைக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. இதேபோல் சின்னமுத்து 2-வது வீதி, கண்ணகி வீதி, வீரப்பன்சத்திரம் காவிரிரோடு, பெரியசேமூர், கலெக்டர் அலுவலகம், பெரியவலசு, வில்லரசம்பட்டி, கொங்கம்பாளையம், மேலகவுண்டன்பாளையம், பெரியண்ணன் வீதி, கருங்கல்பாளையம் கமலாநகர், செங்கோடம்பள்ளம் நல்லியம்பாளையம்ரோடு, கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்திநகர், பார்க்ரோடு, மாதவகிருஷ்ணா வீதி ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான மொடக்குறிச்சி அருகே உள்ள கணபதிபாளையம் இந்திரா காந்திபுரம், பெருந்துறை, திங்களூர் அருகே உள்ள தோரணவாவி, காஞ்சிக்கோவில், தாளவாடி சூசைபுரம், சித்தோடு கே.ஆர்.பாளையம், பவானி காவிரிவீதி, சித்தோடு தெலுங்கு செட்டியார் வீதி, அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஜே.ஜே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 19 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது வரை 523 பேர் குணமடைந்து உள்ளனர். 192 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்