பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக கமல்பந்த் பொறுப்பு ஏற்பு பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பேட்டி

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக கமல்பந்த் பொறுப்பு ஏற்றுள்ளார். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-01 23:19 GMT
பெங்களூரு,

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக இருந்து வந்தவர் பாஸ்கர்ராவ். இவர், நேற்று முன்தினம் பணிஇடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனராக, கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. கமல்பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பெங்களூரு போலீஸ் கமிஷனராக நேற்று காலையில் கமல்பந்த் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவரிடம் முன்னாள் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் பொறுப்புகளை ஒப்படைத்தார். மேலும் கமல்பந்திற்கு, பாஸ்கர்ராவ் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதுபோல, உயர் போலீஸ் அதிகாரிகளும், போலீஸ் கமிஷனர் கமல்பந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பின்னர் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என் மீது நம்பிக்கை வைத்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் பொறுப்பை வழங்கிய முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கும், கர்நாடக அரசுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை உணர்ந்து பணியாற்றுவேன். பெங்களூருவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஏராளமான போலீசாரும் உள்ளாகி உள்ளனர். பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போலீசாரும் விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி பலியான போலீசாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

பெங்களூருவில் கொரோனாவுக்கு மத்தியிலும் போலீசார் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் போலீசாருக்கு சரியான சிகிச்சை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூருவில் கொரோனா பாதிப்பு இருந்தாலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு போலீசாருக்கு உள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூருவில் தற்போது ரவுடிகள் கட்டுக்குள் உள்ளனர். குற்ற சம்பவங்கள் குறைந்து வருகிறது. குற்ற சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள். ரவுடிகள் மீது எந்த விதமான பாரபட்சமும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை, சைபர் கிரைம் குற்றங்கள் அதிகளவில் நடக்கிறது. அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தனிக்கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். குறிப்பாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் நடக்கிறது. அது சைபர் கிரைம் குற்றங்களாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். பெங்களூருவில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்களையும் வசிக்கின்றனர். பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

எனவே பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும், அவர்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கவும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். அதற்கு பொதுமக்கள் பாராட்டும் வகையில் போலீசார் பணியாற்ற வேண்டியது அவசியம். பொதுமக்கள் மத்தியில் போலீசாருக்கு இருக்கும் பயம், கெட்ட பெயர் போக வேண்டும். போலீசாருடன், பொதுமக்கள் எப்போதும் நட்புறவுடன் இருக்க வேண்டியது அவசியம். பொதுமக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது ஒவ்வொரு போலீசாரின் கடமையாகும். அதனை உணர்ந்து பணியாற்ற முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நேற்று காலையில் போலீஸ் கமிஷனராக பதவி ஏற்கும் முன்பாக முதல்-மந்திரி எடியூரப்பாவின் வீட்டுக்கு கமல்பந்த் சென்றார். பின்னர் அவர், முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து பூச்செண்டு கொடுத்தார். அப்போது தன்னை போலீஸ் கமிஷனராக நியமித்ததற்கு எடியூப்பாவுக்கு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கமல்பந்த் வருகை தந்தார். வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பெங்களூரு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர்
கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பாஸ்கர்ராவ் சொல்கிறார்
பெங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த பாஸ்கர்ராவ் இடமாற்றம் செய்யப்பட்டு, உள்நாட்டு பாதுகாப்பு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு போலீஸ் கமிஷனர் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பாஸ்கர்ராவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூரு போலீஸ் கமிஷனராக ஒரு ஆண்டு பணியாற்றியுள்ளேன். எனது பொறுப்பை உணர்ந்து பணியாற்றினேன். இந்த ஒரு ஆண்டு பணிகாலம் மிகவும் திருப்திகரமாக உள்ளது. என்னுடன் பணியாற்றிய சாதாரண போலீஸ்காரர்களில் இருந்து உயர் போலீஸ் அதிகாரிகள் வரை அனைவரும் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். பெங்களூரு நகர மக்களும் முழு ஒத்துழைப்பு அளித்தார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஏனெனில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்த நேரத்தில் பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்கள். பெங்களூருவில் குற்றங்கள் குறைந்துள்ளது. கொரோனாவுக்கு மத்தியிலும் பெங்களூரு போலீசார் மக்கள் பாராட்டும் விதமாக பணியாற்றினார்கள். போலீஸ் கமிஷனர் பொறுப்பை எனக்கு அளித்திருந்த முதல்-மந்திரி எடியூரப்பா, கர்நாடக அரசுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புதிய போலீஸ் கமிஷனர் கமல்பந்த் என்னுடைய தோழரே. அவரும் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்