துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் ரூ.34½ லட்சம் தங்கம் கடத்தல் 2 பேர் கைது

துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் ரூ.34½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த 2 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2020-08-05 21:03 GMT
ஆலந்தூர்,

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்தவர்கள், மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி துபாயில் சிக்கி தவித்த 175 பேருடன் சிறப்பு விமானம் நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தது.

விமானத்தில் வந்தவர்கள் மருத்துவம், குடியுரிமை சோதனைகள் முடித்துகொண்டு வெளியே வந்தனர். அப்போது சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் தஞ்சாவூரைச் சேர்ந்த காசிமணி கொளஞ்சி(வயது 22), முருகன் சந்திரன்(38) ஆகியோர் சந்தேகப்படும்படியாக இருந்ததால் இருவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

ரூ.34½ லட்சம் தங்கம்

அதில் அவர்களது உடைமைகளில் எதுவும் இல்லை. 2 பேரும் அணிந்து இருந்த ஜீன்ஸ் பேண்ட் பெல்ட் பகுதியில் பாலித்தீன் பையில் தங்கத்தை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.34 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 731 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

பின்னர் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்து வருவதால் சிறப்பு விமானங்களில் வருபவர்கள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது.

மேலும் செய்திகள்