நீலகிரி மாவட்டத்தில் கனமழை: சூறாவளி காற்றில் 200 மரங்கள் விழுந்தன - கூடலூரில் வெள்ளம் சூழ்ந்த கிராமத்தை கலெக்டர் பார்வையிட்டார்

நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுக்கு 200 மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.

Update: 2020-08-06 07:00 GMT
ஊட்டி,


நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் மரங்கள் விழுந்து பல கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது. தொடர் மழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை தனி வார்டில் கொரோனா உறுதி செய்யப்பட்ட சில நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று அதிகாலையில் மரம் ஒன்று வேருடன் முறிந்து தனி வார்டு மீது விழுந்தது. இதனால் பயங்கர சத்தம் கேட்டதால் நோயாளிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் இம்மானுவேல் உடனடியாக தீயணைப்பு வீரர்களை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தார்.

மின் வாள் மூலம் மரம் துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. தனி வார்டு மேற்கூரை மற்றும் முன்பகுதி சேதமடைந்தது. முன்னதாக மரம் விழுந்தவுடன் நோயாளிகள் வேறு அறைக்கு உடனடியாக மாற்றம் செய்யப்பட்டனர். யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அனுமாபுரம், பைன்பாரஸ்ட், பைக்காரா, தலைகுந்தா, பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து மரங்கள் விழுந்து கொண்டே இருந்தன. இதனால் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், நெடுஞ்சாலை பணியாளர்கள் ஆகியோர் ஒவ்வொரு இடமாக மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரங்களைஅகற்றுவதற்காக பொக்லைன் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊட்டி-எமரால்டு சாலையில் பல்வேறு இடங்களில் 12 மரங்கள் முறிந்து விழுந்தன. அதேபோல் ஊட்டி-பார்சன்ஸ் வேலி சாலையில் 6 மரங்கள் காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விழுந்தது. ஊட்டி படகு இல்ல சாலை, பஸ் நிலையம் அருகே மரங்கள் விழுந்ததில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. ஊட்டி தமிழகம் சாலையில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வெட்டி மரத்தை அப்புறப்படுத்தினர். ஊட்டி-எடக்காடு சாலையில் ராட்சத மரம் விழுந்தது. ஊட்டி கால்நடை மருத்துவமனை அருகே மரம் விழுந்ததில் ஒரு வீட்டின் சின்டேக்ஸ் டேங்க், மேற்பகுதி சேதம் அடைந்தது.

நீலகிரி மாவட்டத்தில் வீசிய சூறாவளி காற்றால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை 200-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-39, நடுவட்டம்-147, கிளன்மார்கன்-137, குந்தா -70, அவலாஞ்சி-390, எமரால்டு-145, அப்பர்பவானி-306, கூடலூர்-1281 தேவாலா-126, பந்தலூர்-161, சேரங்கோடு-136 பாலகொலா-111 ஓவேலி-40 உள்பட மொத்தம் 2241.4 மழை பதிவாகியது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 39 சென்டி மீட்டர் மழை கொட்டியது.

கூடலூர் மங்குழி ஆற்றுவாய்க்காலில் வெள்ளம் கரை புரண்டு ஓடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் தங்களது குழந்தைகளுடன் வீடுகளை விட்டு வெளியேறினர். மேலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் தண்ணீரின் வேகம் அதிகரித்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.

இதைத்தொடர்ந்து கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜகுமார், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் வருவாய்த்துறையினர் மங்குழி பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மங்குழி பகுதியில் செல்லும் ஆற்று வாய்க்காலை பலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் வாய்க்கால் அகலம் இல்லாமல் சுருங்கி வருகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் வாய்க்காலில் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதேபோல் அப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்களை பராமரிப்பின்றி கிடக்கிறது. எனவே வாய்க்கால் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

முன்னதாக கூடலூரில் வெள்ளம் சூழ்ந்த புரமணவயல் ஆதிவாசி கிராமத்தை மாவட்ட கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா, சிறப்பு அதிகாரி சுப்ரியா சாகு ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்