விளையாட செல்போன் கொடுக்காததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

விளையாட தனது அண்ணன் செல்போன் கொடுக்காததால் மனமுடைந்த 10-ம் வகுப்பு மாணவி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-08-07 22:29 GMT
சென்னை,

சென்னை சூளைமேடு ஆர்.பி.ஐ. பணியாளர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் ஜான்சன். இவர் கேரள மாநிலம் ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். பணியிடம் மாறுதல் காரணமாக ஜான்சன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னை வந்தார்.

இவரது மகள் பிரின்ஸி மெதிலா (வயது 15). இவர் கேரள மாநில அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துள்ளார். இந்தநிலையில், பிரின்ஸி மெதிலா நேற்று முன்தினம் இரவு ஆர்.பி.ஐ. குடியிருப்பு வளாகத்தில் உள்ள சமூக நலக்கூடத்தின் முன்பு தனது குடும்பத்துடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரது அண்ணன் காட்சனிடம் விளையாடுவதற்காக செல்போனை கேட்டுள்ளார். ஆனால் பிரின்ஸி மெதிலாவின் அண்ணன் செல்போன் கொடுக்காததால், கோபித்துக்கொண்டு வீட்டில் தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

தூக்கு போட்டு தற்கொலை

இதையடுத்து வீட்டிற்கு வந்த மாணவியின் பெற்றோர், வெகுநேரமாக பிரின்சியின் அறை பூட்டிக்கிடப்பதை கண்டு கதவை தட்டினர். ஆனால் மாணவி கதவை திறக்காததால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு பிரின்ஸி மெதிலா மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரின்ஸி மெதிலா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்